Banner Wishes

செய்திகள்

Saturday, March 16, 2013

பரதேசி - பாலாவின் வெற்றி படைப்பு

பரதேசி - ஆங்கிலேயர் ஆட்சியில் தேயிலைத் தோட்டத்தில்  அடிமைப்படுத்தப்பட்ட ஒரு இனத்தின் வலியை தாங்கி வெளிவந்திருக்கும் இயக்குனர் பாலாவின் படைப்பு.

கதையானது  1939ம் ஆண்டுதென்தமிழ்நாட்டில் இருக்கும் சாலூர் எனும் கிராமத்தில் ஆரம்பிக்கிறது. அக்கிராமத்தில் தண்டோரா போட்டு சேதி சொல்லி பிழைப்பு நடத்தும் ஒட்டு பொறுக்கி (எ) ராசா (அதர்வா), தன் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் அவ்ஊரிலே வசிக்கும் அங்கம்மாவுக்கும் (வேதிகா) சற்று எல்லை மீறிய காதல். இதன் விளைவாக ங்கம்மா கர்ப்பமடைகிறாள். தன் காதலியை கைப்பிடிக்க, நல்ல பிழைப்பைத் தேடி, பயணப்படுகிறார் ராசா.........

வழியில் சந்திக்கும் கங்காணியின் ஆசை வார்த்தைகளை நம்பி, ராசாவும், அவர் ஊர் மக்களும்  சிறிது முன்பணம் வாங்கி கொண்டு, வெற்று பத்திரத்தில் கையெழுத்திட்டு தருகின்றனர். அதன்பின் 48நாள் பயணமாக தேயிலைத் தோட்டத்திற்கு வந்து சேர்கிறார்கள். அங்கு அவர்கள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டு, அடி, உதை, பெண்கள் பாலியல் வன்கொடுமை, என சித்திரவதை செய்யப்படுகிறார்கள். 

அங்கு கணவனால் கைவிடப்பட்டு, குழந்தையுடன் வாழும் தன்சிகாவுடன் அடைக்கலமடைகிறார் ராசா. இந்நிலையில், ங்கம்மா கர்ப்பமான விஷயம் தன் பாட்டி அனுப்பும் கடிதம் மூலம் ராசாவிற்கு தெரியவர, ங்கம்மாவை பார்க்கத் ஊருக்கு சென்றுவர நினைக்கிறான். ஆனால், அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் தேயிலைத் தோட்டத்திலிருந்து தப்பித்துச் செல்லும் ராசாவை, கங்காணியின் ஆட்கள் பிடித்து, தப்பித்துச் செல்ல முடியாதபடி அவர் பினங்கால் நரம்பை துண்டித்துவிடுகிறார்கள்.

போதிய மருத்துவ வசதி மற்றும் சுகாதாரம் இல்லாமையால் விஷ காய்ச்சல் வந்து தன்ஷிகா உட்பட தோட்டத்தில் பணிபுரியும் பலர் இறக்க நேரிடுகிறது. தன்ஷிகாவின் குழந்தைக்கு ராசா ஆதரவாக இருக்கிறார். இதன்பின் இவர்கள் நிலை என்ன? ராசா-ங்கம்மா சந்தித்தனரா? என்பதை எவரும் எதிர்பாராத நெஞ்சை உலுக்கும் (உடைக்கும்) முடிவுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

அரை மொட்டை, கோணி சாக்கு ஆடை, வெறுமையான முகம், என ஒட்டு பொறுக்கி (எ) ராசா என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் அதர்வா. இயக்குனரிடம் தன்னை முழுமையாக அர்பணித்துவிட்டார். அதிலும் இறுதிக்காட்சியில் "நியாயமாரே...!" என இவர் கத்தி கதறி, கூச்சலிடுவது, நெஞ்சை உலுக்கி கண்ணில் கங்கையை வரவழைக்கிறது.

ங்கம்மாவாக வேதிகா, ஏதோ வெண்சிலையை கருப்பு/வெள்ளை படத்தில் பார்ப்பது போல இருக்கிறார். அதர்வாவை கிண்டலடித்து, துரத்தி துரத்தி காதலிக்கிறார். அதிலிலும் இழவு வீட்டில் இவரும், அதர்வாவும் கண் ஜாடையில் பேசுவது ரசனை.

 தன்னை விட்டு கணவன்  ஓடிப் போய்விட தனது குழந்தையுடன் அடிமையாக இருக்கிறார் தன்ஷிகா. முதலில் அங்கு  வரும் அதர்வாவை  அடித்து விரட்டுவது துவங்கி பேச்சு, தோரணை என ஆண்மை தன்மையுடன் வலம் வருகிறார்.  ஆனாலும் விஷ காய்ச்சலால் இறக்கும் போது அனுதாபத்தை பெறுகிறார். 

கங்காணியாக வருகிறார் இயக்குனர் ஜெர்ரி, தேன்வழிய பேசி மக்களை வேலைக்கு வர சம்மதிக்க வைப்பது, தோட்டத்தில் பணியாட்களை அடித்து துவம்சம் செய்வது, இவரே ஆங்கிலேய துரையிடம் அடிவாங்குவது என இவர் கதாபாத்திரம், ஆங்கிலேயர் எவ்வாறு நம் விரலை வைத்தே நம் கண்ணை குத்தினார்கள் என்பதை பிரதிபலித்து காட்டுகிறது.

மருத்துவராக  நடன இயக்குநர் சிவசங்கர், இவர் கதாபாத்திரம் வாயிலாக கிறிஸ்தவம் எவ்வாறு நம்மிடையே வந்தது என கூறியிருக்கிறார் இயக்குனர்.

அடுத்து படத்தில் வரும் கதாபாத்திரமத்தில் நம் மனதில் இடம் பிடிப்பது அதர்வாவின் பாட்டியாக வரும் கச்சம்மாள், என்ன ஒரு எதார்த்தமான நடிப்பு, முதல் படமென்றால் நம்புவது சிரமமே.

 இத்திரைப்படம் இயக்குனர் பாலாவின் இந்நாள் வரையிலான படைப்புகளிலே மிக சிறந்த படைப்பு என்றால் , அது மிகையாகாது. ஏனெனில், இந்த கலை படத்தில் எவரையும் நடிக்க வைக்கவில்லை, அந்ததந்த கதாபாத்திரமாகவே வாழவைத்து, தத்ருபமாக நம் கண் முன்னே காட்டியுள்ளார். முதல் பாதி முழுக்க காதல், மற்றும் காமெடியும், இரண்டாம் பாதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் அவலங்களும், சாட்டையடி கேள்விகளும், முடிவில் நெஞ்சை அதிர வைக்கும் காட்சிகள் என தனக்கே உரித்தான பக்குவத்தில் பரிமாறியிருக்கிறார் பாலா.

இசை ஜி.வி.பிரகாஷ். பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே மக்களை சென்றடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. காட்சியுடன் ஒன்றிணைப்பதில் பின்னணி பெரும் பங்கு வகிக்கிறது. இயக்குனர் தவிர்த்து படத்தின் முக்கிய தூண்கள் ஒளிப்பதிவாளர் செழியன், எடிட்டர் கிஷோர் மற்றும் கலை இயக்குனர். இவர்களாலேயே படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை.நாமும் 1939-ம் காலகட்டத்தில் இருந்தது போன்ற தாக்கத்தை உண்டாக்குகிறது.

இந்தப் படத்தின் வாயிலாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வஞ்சிக்கப்பட்ட கொடூர வரலாறு என்ன என்பதை நாம் அறியும் என்று நினைக்கிறேன். நாம் அருந்தும் தேநீரின் நிறத்திற்கு காரணம், அதில் இவர்கள் ரத்தமும் கலந்திருப்பதாலோ என்னவோ? இந்தப் படத்தின் பத்திரிகையளர் சந்திப்பில் பாலா, ‘இந்தப் படத்தைப் பார்த்த பின், டீ குடிக்கிறதுக்கு முன்னால இந்தப் படம் உங்களுக்கு நினைவுக்கு வரும்’ என்று கூறியிருந்தார். அதன் உண்மையை உணர்கிறேன்!!! மொத்தத்தில் ‘பரதேசி’ விருதுகள் பல குவிக்கும் என்பதில் ஐயமில்லை.

 -- R.Bala 

            Real Making of "Paradesi" - Cut-to-Cut From SUNTV

===============================================================

சமீபத்தில்வெளியான வீடியோவை (கீழே இணைக்கப்பட்டுள்ளது) பார்த்துவிட்டு பாலாவை டெர்ரரிஸ்ட் என்றவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்..! காட்சிகளை இயக்குநர் சொல்லித் தரும்போது இதைத்தான் செய்வார்கள்..! அது டம்மி குச்சி என்பது அனைவருக்குமே தெரியும்.. அனைத்து படங்களிலும், அனைத்து இயக்குநர்களும் செய்யும் செயல்தான் இது.. இதுவே இப்படியென்றால் பருத்தி வீரனில் பொன்வண்ணன், பிரியாமணி குடையால் சாத்துகின்ற காட்சியை என்னவென்று சொல்வீர்கள்.. அது 15 டேக்குகள் எடுக்கப்பட்டதாம்..! நம்ப முடிகிறதா..?

இப்போது இந்த டீஸரை வெளிடாமல் இருந்திருந்தால் வெறுமனே படத்தில் அந்தக் காட்சியை பார்த்துவிட்டு நாம் மெளனமாக போயிருப்போம்.. இயக்குநர் சொல்லிக் கொடுப்பதை பார்த்தவுடன்தான் அனைவருக்கும் இது கொடூரமாகத் தெரிகிறது..! சினிமாவாக வெண் திரையில் பார்த்தால்..? ரசிகர்கள்தான் யோசிக்க வேண்டும்..!

[ நன்றி - உண்மை தமிழன் ]
                Real making of "Paradesi" - From VikatanTV

2 comments:

  1. இன்று செல்கிறேன்... விமர்சனத்திற்கு நன்றி..

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்! நன்றி!

    ReplyDelete