Banner Wishes

செய்திகள்

Friday, November 1, 2013

இப்படியும் ஒரு "இன்சூரன்ஸ்' - ரயிலில் "வித்-அவுட்'களை காப்பாற்ற

ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதை பயன்படுத்தி, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரைக் காப்பாற்ற நூதன முறையில் மோசடிகள் அரங்கேறத் துவங்கியுள்ளன.

ஆண்டுக்கு ஆண்டு புதிய ரயில்கள், புதிய ரயில்வே வழித்தடங்கள் அமைப்பது என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தினாலும், அதற்கேற்ப பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில்லை என்பது நீண்ட கால புகாராக உள்ளது. அலுவலர் பற்றாக்குறையால், ரயில்வே துறைக்கு வர வேண்டிய வருவாயும் குறைந்து, நஷ்டம் அதிகரித்து வருகிறது.

 இதில் முக்கியமானது, டிக்கெட் பரிசோதகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதுதான். பயணிகள் கட்டணத்தில் கிடைக்கும் வருவாயைப் பொறுத்தவரை, வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் குறைவான ரயில்களில் அதிகமான வருவாய் கிடைக்கிறது. தென் மாநிலங்களில் உள்ள மக்கள், பெரும்பாலும் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதில்லை என்பதே அதற்குக் காரணம்.


ஆனால், வட மாநிலங்களில் தொலை தூர ரயில், அருகருகிலுள்ள நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்கள் போன்ற எந்த ரயிலிலுமே டிக்கெட் எடுப்பது மிகக்குறைவுதான். மும்பை போன்ற பெருநகரங்களில் டிக்கெட் எடுக்காமல் செல்வோரைக் காப்பாற்றுவதற்கென்றே பல நூதன முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன; அவற்றில் ஒன்றுதான், "இன்சூரன்ஸ்' முறை.

இந்த முறைப்படி, தினமும் பயணம் செய்யும் ரயிலில், முன் பதிவு இல்லாத இரண்டாம் வகுப்பில் பயணம் செல்வோர், டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை; அதற்கு செலவாகும் தொகையில், பாதிக்கும் குறைவான தொகையை இன்சூரன்ஸ் கும்பலுக்கு "பிரீமியம்' ஆகச் செலுத்த வேண்டும்; அதன்பின், அந்த ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்யலாம். ரயிலில் வரும் டிக்கெட் பரிசோதகர், "ஸ்குவாடு' அல்லது ரயில்வே ஸ்டேஷனில் உள்ள டிக்கெட் பரிசோதகர் யாரிடம் அந்த பாலிசிதாரர் சிக்கினாலும் கவலைப்பட வேண்டியதில்லை;

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை இன்சூரன்ஸ் கும்பல் செலுத்தி விடும்; இல்லாவிடில், அந்தத் தொகையை செலுத்தி விட்டு, அந்த ரசீதைக் காண்பித்தால், அபராதத்தொகையை இன்சூரன்ஸ் கும்பல் வழங்கி விடும். டிக்கெட் பரிசோதகர்கள் மிகக் குறைவாக உள்ளனர் என்ற நம்பிக்கையே இந்த கும்பலின் தொழில் முதலீடு. ஆயிரக்கணக்கானவர்களிடம் பிரீமியம் தொகையை வாங்கிக்கொண்டு, எப்போதோ மாட்டிக்கொள்ளும் சிலருக்கு மட்டும் அபராதத்தொகையைத் தருவதன் மூலமாக, மாதந்தோறும் பல லட்ச ரூபாயை அந்த கும்பல் சம்பாதிக்கிறது. வடமாநிலங்களில் இருந்த இந்த நூதன மோசடி, சமீபகாலமாக தென் மாநிலங்களில் உள்ள நகரங்களிலும் தலை தூக்கி வருவதாக, ரயில்வே அலுவலர்கள் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கின்றனர்.

எனவே, கூடுதலாக ரயில் டிக்கெட் பரிசோதகர்களை நியமித்து, "வித்-அவுட்' கலாசாரம் இங்கேயும் பரவ விடாமல் தடுக்க வேண்டும் என்பதே, இவர்களின் கோரிக்கை!!!

நன்றி - தினமலர் சிறப்பு நிருபர்

No comments:

Post a Comment