Banner Wishes

செய்திகள்

Sunday, June 23, 2013

சுட்டிகளுக்கென பாதுகாப்பான தனி தேடு இயந்திரங்கள்

இணைய உலகில் கூகுளைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. தேடல் உலகின் ராஜா என்று சொல்லப்படும் கூகுள் தளத்தை (Google) நிச்சயம் நீங்களும் அறிந்து வைத்திருப்பீர்கள். இணையத்தில் தகவல்களைத் தேட நீங்களே பல முறை இந்தத் தேடு இயந்திரத்தைப் (சர்ச் இஞ்சின்) பயன்படுத்தி இருப்பீர்கள்.

கூகுள் போலவே வேறு பல தேடு இயந்திரங்கள் இருப்பதையும் நீங்கள் அறிந்து இருக்கலாம். ஆனால், சிறுவர்களுக்கு என்றே தனியாகத் தேடு இயந்திரங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?  சுட்டிகளுக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்புத் தேடு இயந்திரங்களும் இருக்கின்றன.

இந்தத் தேடு இயந்திரங்கள் பாதுகாப்பானவை. எளிமையானவை. சுட்டிகளுக்கு ஏற்ற வகையில் வண்ணமயமானவை கூட.
கூகுளில் எந்தத் தகவல் தேடினாலும் கிடைக்கும். ஆனால், சிறுவர்கள் பார்வையில் படக்கூடாத தகவல்களும் தளங்களும்கூட கண்ணில் படலாம். அதனால்தான் உங்கள் அம்மாவோ, அப்பாவோ நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது பின்னால் இருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் என்றால், தவறான இணையதளத்தின் பக்கம் பிள்ளைகள் போய்விடக் கூடாது என்பது அவர்கள் கவலை.

சிறுவர்கள் பார்க்கக் கூடாத தளங்களைத் தடுத்துவிடும் சாஃப்ட்வேர் எல்லாம்கூட இருக்கின்றன. நல்ல தளங்களை மட்டுமே இந்த சாஃப்ட்வேர்கள் வடிகட்டித் தருகின்றன. இத்தகைய பாதுகாப்பு பிள்ளைகளுக்குத் தேவை என்று எல்லாப் பெற்றோர்களும் எதிர்பார்க்கவே செய்வார்கள்.  

இந்தத் தேடு இயந்திரங்கள் பாதுகாப்பானவை மட்டும் அல்ல; சுட்டிகள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மிகவும் ஜாலியானவையும்கூட. உதாரணத்துக்கு, 'அகா-கிட்ஸ்’ டாட் காம் தேடு இயந்திரத்தை முதலில் பார்ப்போம். இதன் முகப்புப் பக்கத்தை (ஹோம் பேஜ்) பார்த்தாலே ரொம்ப ஜாலியாக இருக்கும்.

 சின்னச் சின்ன பொம்மைகளோடு வரவேற்கும். இதில், கூகுளில் இருப்பது போலவே தேடுவதற்கான கட்டம் இருக்கிறது. முதலில் தேடுவதற்கான பெயருக்கு உரிய வார்த்தையை டைப் செய்து தேடலாம். அதன் பிறகு தேடல் பட்டியல் தோன்றும். அதில் இருந்து தேவையான தகவலை எடுத்துக் கொள்ளலாம். எல்லாமே உங்களுக்குப் பொருத்தமான தளங்களாக இருக்கும்.

இந்தத் தேடு இயந்திரம் கொஞ்சம் விஷ§வலானது. அதாவது, படங்களுடன் தகவல்களும் தேவையா என்று தீர்மானித்துக்கொள்ளலாம். தேடுவதற்கு முன்பே தகவல்கள் சாதாரணமாகத் தோன்ற வேண்டுமா அல்லது காட்சி ரீதியாகத் (விஷுவலாக) தோன்ற வேண்டுமா எனத் தேர்வு செய்துகொள்ளலாம்.

இதைத் தவிர கார்ட்டூன், விளையாட்டுகள், பொம்மை செய்தல் ஆகிய தனிப் பகுதிகளும் இருக்கின்றன. இணையத்திலேயே வரைவதற்கான பகுதியும் இருக்கிறது. அதுமட்டும் அல்ல... தேடல் கட்டத்துக்கு மேலேயே பல குறிச் சொற்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. அவற்றிலும் க்ளிக் செய்து பார்க்கலாம். இந்தத் தேடு இயந்திரத் தளத்துக்கான முகவரி: http://aga-kids.com

'ஆஸ்க் கிட்ஸ்’... இதில் உங்கள் சந்தேகத்தையும் கேள்வியாகக் கேட்டுத் தேடலாம். நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு உரிய பதில்கள் இதில் தொகுக்கப்பட்டு உள்ளன. இதைத் தவிர விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் பற்றியும் தேடலாம். இதன் முகவரி: http://www.askkids.com

'கிட்ஸ் க்ளிக்’ தேடு இயந்திரம் சிறுவர்களுக்காகவே நூலகர்களால் உருவாக்கப்பட்டது. எனவே, ஹோம் வொர்க்குக்குத் தேவையான தகவல்களை இதில் தைரியமாகத் தேடலாம். இதன் முகவரி: http://kidsclick.org


இது போலவே, 'கிட் ரெக்ஸ்’ தளமும். இது, கூகுளைப் பயன்படுத்தி சிறுவர்களுக்குப் பொருத்தமான தளங்களை மட்டும் தருகிறது. இதில் சுட்டிகளுக்குத் தனிப் பகுதியும், பெற்றோர்களுக்குத் தனிப் பகுதியும் இருக்கிறது. சுட்டிகளுக்கான பகுதியைக் க்ளிக் செய்தால், குட்டீஸ் வரைந்த அழகான ஓவியங்களைப் பார்க்கலாம். 

பெற்றோர் பகுதியில் இந்தத் தேடு இயந்திரம் பற்றியும், இது ஏன் குழந்தைகளுக்கு ஏற்றது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முகவரி: http://www.kidrex.org

இனி, உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட தேடு இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது, பெற்றோரின் கண்காணிப்பு அவசியமே இல்லை.

நன்றி - கல்வி விகடன் (to read original post)

No comments:

Post a Comment