Banner Wishes

செய்திகள்

Wednesday, February 6, 2013

ஐ.நா.சபையில் ஒலிக்கப் போகும் ஸ்வர்ணக் குரல்!

"இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்குத்தான் அதிகத் துணிச்சல் தேவை".

பெரிய வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகச்  சொல்கிறார் ஸ்வர்ணலஷ்மி. விரைவில் ஐ.நா.சபையில் கணீர் என ஒலிக்கப்போகிறது பார்வையற்ற இந்தத் தோழியின் குரல்.

சென்னை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் ஸ்வர்ணலஷ்மி, மாநில அளவிலான குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர்.


இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டது இந்தக் குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993-ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கிவருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. 

சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே'' என்கிறார் குழந்தைகள் பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர் சூரியசந்திரன்.

குழந்தைத் திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக்கொள்ள முடிகிறது.

'ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். அப்படித் தேர்வுசெய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவரை யாராவது ஒருவருக்கு உடன்பாடு இல்லை என்றாலும் உடனே எதிர்க்கலாம். அதற்கான காரணம் ஏற்புடையதாக இருக்கவேண்டும். இப்படி ஒருமனதாக அனைவரும் தேர்வுசெய்யப்படும் வரை தேர்தல்கள் நடத்தப்படும்'' என்கிறார் ஸ்வர்ணலஷ்மி.

இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வுசெய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்களை மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வுசெய்வார்கள். இந்த மாநிலப் பாராளுமன்றத்துக்கு கடந்த ஆண்டு நிதி அமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்டார் ஸ்வர்ணலஷ்மி.

''நிதி அமைச்சராகச் செயலாற்றிய ஸ்வர்ணலஷ்மியின் திறமையைப் பாராட்டித் தற்போது பிரதமராக நியமித்து இருக்கிறார்கள். இந்தச் சமயத்தில்தான் ஐ.நா.சபையின் அறிவிப்பு வந்தது. 

இந்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா. சபையில் குழந்தைகள் பிரச்னைகளையும், அவர்களுக்கான பாதுகாப்பையும் பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சியில் உலக அளவிலான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பேச இருக்கிறார்கள். அதில் ஸ்வர்ணலஷ்மியும் ஒருவர்'' என்கிறார் சூரியசந்திரன்.

''பயமும் தயக்கமும்தான் நம்முடைய மிகப் பெரிய எதிரிகள். ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. 'எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக்கொண்டேன். 

ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின்போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்'' என்கிற ஸ்வர்ணலஷ்மி ஐ.நா.சபையில் பேசத் தயாராகிவருகிறார்.

'' 'உனக்கு ஐ.நா.சபையில் பேசும் வாய்ப்புக் கிடைச்சு இருக்கு’ என்று சொன்னபோது நான்  ரொம்ப சந்தோஷப்பட்டேன். என் தன்னம்பிக்கையை வளர்த்த குழந்தைகள் பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர்கள், துணைநின்ற ஆசிரியர்கள், ஊக்கம்கொடுத்த நண்பர்கள், பெற்றோர்  அனைவரும் பெருமைப்படும் விதமாக ஐ.நா.சபையில் பேசுவேன். நமது இந்தியக் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் துணைசெய்யும் விவாதத்தை எடுத்துரைப்பேன்'' என்கிறார்.

ஸ்வர்ணாவின் குரல் உலக அளவில் ஓங்கி ஒலிக்கட்டும்!

நன்றி - விகடன் (to read original post). 

டிஸ்கி : 
இக்கட்டுரை சுட்டி விகடன் (15.02.2013) இதழில் வெளியாகியுள்ளது. 

2 comments:

  1. Best Free Premium Blogger,Blogspot Templates for your blog.Latest High Quality Free Premium Blogger Templates,Themes,Layouts Free Download To Change Your Blogger Template Free download blogger template

    ReplyDelete
  2. As a Social Worker for the last four Decades to the welfare of the Blind in Tamil Nadu, I am very much proud of the Girl, with vision impaired Student Swarna Lakshmi!

    ReplyDelete