Banner Wishes

செய்திகள்

Sunday, May 19, 2013

தமிழ் நாட்டில் முதன்முறையாக திருநங்கைக்கு அரசு பணி


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் குணவதி (33). திருநங்கையான இவர் எம்.ஏ. (ஆங்கிலம்), கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறார். இந்நிலையில் சமுதாயத்தில் தங்களைப் போன்ற திருநங்கைகள் மீதுள்ள மோசமான எண்ணத்தை மாற்ற வேண்டும். மற்றவர்களைப் போல் தாங்களும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு அரசு பணி வழங்க வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் மனு கொடுத்திருந்தார்.

இவரது மனுவை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் இவரை தற்காலிகமாக பணியமர்த்தி உள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டு, குழந்தைகளை அருகில் குப்பையில் வீசிவிட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்கும் பணி குணவதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய குணவதி, 'பஸ் நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் உணவுக்காக மற்றவர்களிடம் கையேந்தி பிழைப்பதை கேவலமாக நினைக்கிறேன். நான் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தேன். அவரும் எனக்கு இந்த பணியை வழங்கியுள்ளார்.

தாய்மை உணர்வுடனும், மிகுந்த பொறுப்புடனும் இந்த பணியை திறமையாக செய்வேன் என நம்பிக்கை இருக்கிறது. எங்களைப் போன்ற திருநங்கைகளை இதுபோன்ற அரசு பணிகளில் ஈடுபடுத்தினால் நாங்களும் சக மனிதர்களைப் போல வாழ முடியும். அதற்கு நான் ஒரு முன் உதாரணமாக திகழ்வேன்' என்றார்.

இதுகுறித்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் சி.சுப்பிரமணியம் கூறும்போது, 'இந்த பணி மிகவும் கடுமையான பணி. இதில் குணவதி திறமையாக செயல்படுவார் என நம்புகிறோம். இவருக்கு தற்போது 4 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவருடைய திறமையைப் பொறுத்து எதிர்காலத்தில் இவரது பணி நிரந்தரமாக்கப்படலாம்' என்றார்.
நன்றி விகடன்

2 comments:

  1. இது தொடரட்டும்... அவர்களின் வாழ்வும் சிறக்கட்டும்...

    ReplyDelete
  2. அவர்கள் வாழ்வுக்கு இதுபோல் அரசு வழிசெய்தால் அவர்கள் ஏன் பிச்சை எடுக்கப் போகிறார்கள்..

    ReplyDelete